தேர்தல் அறிக்கை : “லின்க்ட் இன்” தளத்தில் ராகுல் காந்திக்கு குவியும் பாராட்டு மழை

டில்லி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்குள் வேலைவாய்ப்பு தளமான லின்க்ட் இன் தளத்தில் ராகுல் காந்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

லின்க்ட் இன் என்பது வேலைவாய்ப்பு குறித்த சமூக வலை தளமாகும். இதில் பல தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளனர். அத்துடன் இந்த தளத்தில் பல சமூக பொருளாதார விவகாரங்கள் அவர்களிடையே விவாதம் செய்யப்படுகிறது. இந்த தளம் முகநூல் பாணியில் அமைந்திருந்தாலும் இது முழுக்க முழுக்க தொழில் மற்றும் தொழில் நுட்ப விவகாரங்களை மட்டுமே முன் நிறுத்துகிறது.

இந்த வலை தளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நமது சுதந்திர நிகழ்ச்சி நிரல் என்னும் தலைப்பில் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டார். ராகுல் காந்தி, “வேலைவாய்ப்பு அமைத்தல் எங்களின் முதல் பணி ஆகும். தற்போதைய பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது. முதல் கட்டமாக அதை மேம்படுத்த திட்டங்கள் அமைக்கப்படும்.

பணமதிப்பிழப்பு மூலம் மக்களின் பணத்தை பாஜக அரசு கொள்ளை அடித்தது. அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் முறையற்ற ஜிஎஸ்டி அமுலாக்கம் நடந்தது. அது இந்திய பொருளாதாரத்தின் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியது. தற்போது பலர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களுக்காக நியாய் என்னும் குறைந்த பட்ச ஊதிய திட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமைக்க எண்ணி உள்ளது.

அது மட்டுமின்றி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மருத்துவ சிகிச்சை உரிமை சட்டபூர்வமாக்கப்பட்டு அனைவருக்கும் சரியான சிகிச்சைகள் கிடைக்க வழி செய்யப்ப்டும். இவ்வாறு பல உரிமைகளை பாஜக அளிக்கவில்லை. எனவே மக்கள் காங்கிரசை தேர்வு செய்ய இரு விருப்பங்கள் உள்ளன. ஒன்று பயமின்றி சுதந்திரமாக வழ்வது, மற்றது மக்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்க வழி செய்வது” என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பதிவுக்கு லின்க்ட் இன் உபயோகிப்பாளர்கள் மிகவும் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியோர் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.