புவனேஸ்வர்:

 

ஒரிசாவில் திருமண பரிசாக வெடிகுண்டு அனுப்பி மணமகன் இறந்ததால் ஒரு கல்லூரி பேராசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஓரிசாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில்  திருமணத்தன்று மணமக்களுக்கு ஒரு பரிசு பார்சல் வந்துள்ளது.    அந்த திருமண பரிசு பார்சலில் வெடிகுண்டு இருந்தது. அந்த பார்சலை திறக்கும் போது வெடிகுண்டு வெடித்து மணமகன் சவுமியா சேகர் சாகு மற்றும் அவரது பாட்டி  கொல்லப்பட்டுள்ளார்.   மேலும் மணப்பெண் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக  கல்லூரி பேராசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியை புஞ்சிலால் மெஹர் என்பவர் கொல்லப்பட்ட மணமகனின் தாயாருடன் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளார்.   அவருக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை கொல்லப்பட்ட மணமகனின் தாயாருக்கு நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது.    ஆத்திரம் அடைந்த புஞ்சிலால் மெஹர்  திட்டமிட்டு பழிக்கு பழி வாங்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புஞ்சிலால் மெஹர் இணையத்தில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் முறையை தெரிந்து கொண்டு, தனது வீட்டிலேயே வெடிகுண்டு பார்சலை தயார் செய்துள்ளார்.   அதன்  பின்னர் சுமார் 230 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பயணம் செய்து அங்கிருந்து அந்த வெடிகுண்டு பார்சலை மணமகனின் பெயருக்கு அனுப்பியுள்ளார். அவ்வாறு அனுப்பப் பட்ட பார்சலானது சுமார் 650 கி.மீட்டர் தொலைவு, 3 பேருந்துகளில் மாறி மாறி பயணம் செய்து இறுதியில் பிப்ரவரி 20 ஆம் தேதி  மணமகனிடம் வந்து சேர்ந்துள்ளது.   மணமகன். திருமணத்தன்று மாலை மணமகளுடன் இணைந்து பார்சலை திறந்து பார்த்த போது மணமகனும் மற்றும் ஒருவரும் பலியாகி  உள்ளார்.