சென்னை;

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய விவகாரத்தில் அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் நேற்று நிர்மலாதேவியை கைது செய்த அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்து 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் உயர்அதிகாரிகளின் செல்போன்கள், ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் இருந்தாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், நிர்மலாதேவி விவகாரம் குறித்து அவர் பணியாற்றிய செங்குந்தர் கல்லூரி சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதுபோல மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டிருப்பதாக துணைவேந்தர் செல்லப்பா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கவர்னர் பன்வாரிலும் தன்னிச்சையாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில்  விசாரணை கமிஷன் அமைத்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், வழக்கை அருப்புக்கோட்டை போலீசாரிடம் இருந்து டிஜிபி ராஜேந்திரன், சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வரும் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜி.எஸ்.மணி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி மனு தாக்ககல் செய்துள்ளார்.