மதுரை:

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கவர்னர் அமைத்துள்ள விசாரணை குழு இன்று அருப்புக் கோட்டையில் விசாரணை நடத்துகிறது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவியின் ஒலிநாடா வெளியான விவகாரம் தொடர்பாக கவர்னர் ஒரு விசாரணை குழுவும், கல்லூரி நிர்வாகம் சார்பில் ஒரு குழுவும், சிபிசிஐடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநர் நியமனம் செய்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து இன்று, சந்தானம் மற்றும் 2 பெண் அதிகாரிகள்  அருப்புக்கோட்டையில் விசாரணையை மேற்கொள்கின்றனர்.

இதனிடையே, பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

இதற்காக நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்படுத்தப்பட உள்ளார்.