விருதுநகர்:

மாணவிகளை தவறான பாதைக்கு வர அழைப்பு விடுத்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகளை டிஜிபி ராஜேந்திரன் அமைத்துள்ளார்.

அதன்படி,  நெல்லை, ராமநாதபுரம், குமரி, திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி மாவட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த 17ந்தேதி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவனங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.