குரல் பரிசோதனை: சென்னை தடயவியல் அலுவலகம் அழைத்துவரப்பட்டார் நிர்மலா தேவி

சென்னை:

மாணவிகளை தவறான பாதைக்கு வர அழைப்புவிடுத்த பேராசிரியை நிர்மலா தேவி, குரல் பரிசோதனைக் காக சென்னை அழைத்து வரப்பட்டார்.

நேற்று மாலை சென்னை அழைத்து வரப்பட்ட நிர்மலாதேவி, நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று காலை  குரல் பரிசோதனைக்காக சென்னை  மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு குரல் பரிசோதனை நடைபெறுகிறது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் அவரது ஆடியோ வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் நோக்கில் காவல்துறை குரல் பரிசோதனையை இன்று நடத்துகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, தன்னிடம் படிக்கும்  மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில்,  நிர்மலா தேவியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், மொபைலில்  நிர்மலாதேவி பேசியது உண்மையா என்பதை நிரூபிக்கும் வகையில், அதற்காக குரல் பரிசோதனை நடத்த  அனுமதி கோரி  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிசிஐடி போலீசார் மனு செய்திருந்தனர்.

இதன் மீதான விசாரணையை தொடர்ந்து,   ஜூன் 27, 28, 29 ஆகிய மூன்று நாள்கள்  குரல் பரிசோதனைக் காக நிர்மலா தேவியை சென்னை அழைத்துச் செல்ல நீதி மன்றம்  அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து, நேற்று காலை  காலை 9.30 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.  சென்னை வந்தடைய  இரவு நேரம் ஆகி விட்டதால், நிர்மலா தேவி நேற்று இரவு  புழல் பெண்கள் மத்திய சிறையில்  அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி குரல் பரிசோதனைக்காக மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.