பேராசிரியை நிர்மலாதேவியின் 3 செல்போன்கள் பறிமுதல்: திடுக்கிடும் தகவல்

சென்னை:

ல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இன்று அவர் பயன்படுத்தி வந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த செல்போன்களில்  உயர் அதிகாரிகளின் மொபைல் எண்கள், மற்றும் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும் இருந்தாக கூறப்படுகிறது.

அருப்புக்கோட்டை செங்குந்தர் கல்லூரி பேராசிரியையாக இருப்பவர் நிர்மலாதேவி. இவர் தனது கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி தவறான நடத்தையில் ஈடுபட வலியுறுத்திய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி, அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு  பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் இருந்து 3  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல்  மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. ஆனால், போலீசாரின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மறுப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மாணவிகளிடம் பேசியது நான்தான். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் இந்த வி‌ஷயத்தில் என் மீது பழி போட்டு விட்டு தப்பிக்க நினைக்கிறது என்று நிர்மலாதேவி கூறியுள்ளார்.

நிர்மலாதேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

நிர்மலாதேவி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1. 370 ஐ.பி.சி. – பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல்.

2. 511 ஐ.பி.சி. – குற்றச் செயலுக்கு முயற்சி செய்தல்.

3 தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 67 ஆகிய 3 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவுகளின் படி அவர் உடனடியாக ஜாமினில் வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நிர்மலாதேவின் செல்போன்களை ஆராய்ந்து பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அவர் வைத்திருந்த போன் மூலம், விருதுநகர், மதுரையை சேர்ந்த உயர் அதிகாரிகளின் எண்கள் இருந்ததாகவும், அவர்களிம் பேசி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், அவரது போனில் ஏராளமான இளம் பெண்களின் புகைப்படங்களும் இருந்தாக கூறப்படுகிறது.

நிர்மலாதேவி போன் மூலம் யார் யாரிடம் எவ்வளவு நேரம் பேசி உள்ளார் என்பது குறித்து தகவல் திரட்டப்பட்டு வருவதாகவும்,   செல்போன்களில் உயரதிகாரிகளின் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.