பேராசிரியர் பாலியல் தொல்லை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவி தற்கொலை

சேலம்:

பேராசிரியர் பாலியல் தொல்லை காரணமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த முதுநிலை மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையினரைக் கொண்டு மாணவர்களை மிரட்டி வருவதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் நிவேதிதா. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர்  நேற்று  விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.

இந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்திய நிலையில், மாணவியின் தற்கொலைக்கு குறிப்பிட்ட பேராசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லையே காரணம் என்று குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்கிடையில் மாணவி தூக்கில் தொங்கி உயிரிழந்தது குறித்து, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும்,  5 மணி நேரமாக பல்கலைக்கழக துணை வேந்தரோ, குறிப்பிட்ட முக்கியமான நபர்கள் யாருமே  சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள மாணவர்கள், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பேராசிரியரை பாதுகாக்கும் நோக்கிலும், மாணவியின் தற்கொலை விவகாரத்தை திசை திருப்பும் நோக்கில்  கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்,  விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவியின் அறையில் போலீசார் சோதனையிட்டதில்,3 பக்க கடிதம், டைரி உள்பட பல பொருகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு போராடிய மாணவர்களை காவல்துறையினர் உதவியுடன் பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மாணவி பாலியல் தொல்லையால் பலியானதை கல்லூரி நிர்வாகம் மறைக்க முயற்சிப்பதாகவும், காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக திட்டமிட்டு  பரப்பி வருவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததைத் தொடர்ந்து, கல்லூரில விடுதிக்கு காலவரை யற்ற விடுமுறை அளிக்கப்பட்டு 400 க்கும் மேற்பட்ட மாணவிகளை உடனே வெளியேற்றி உள்ளது கல்லூரி நிர்வாகம். இது மாணவி தற்கொலையில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.