அனிதா மரணம்: மக்களுக்கு பயந்து  நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் பாஜக தலைகள்! சென்னை:

அனிதா தற்கொலை சம்பவத்தையடுத்து, பயந்து போய்,  தமிழக நிகழ்ச்சிகளை பாஜக தலைவர்கள்  ரத்து செய்து வருகிறார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா. ஆனால் மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தரவில்லை. மத்திய மாநில அமைச்சர்கள் இத் தேர்வு குறித்து குழப்படியான கருத்துக்களை தெரிவித்துவந்தனர். இறுதியில் உச்சநீதிமன்றத்தில் திடீரென பல்டியடித்து நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது மத்திய பாஜக அரசு.

இதனால் தனது மருத்துவர்  கனவுபறிபோன விரக்தியில் அனிதா, தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும் ஆங்காங்கே மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.

இதற்கிடையே சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு கடும்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேறு பல இயக்கங்களும், மாணவர் அமைப்புகளும், பாஜக மற்றும்  அதிமுகவினருக்கு எதிராக  போராட்டங்களில் ஈடுபட  வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.  இதையடுத்து பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழகம் முழுக்க பாஜகவினர் பங்கேற்கவிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யயப்பட்டு இருக்கின்றன.  மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனின் சென்னை, கோவை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இதே போல மற்ற சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், பாஜக தலைவர்கள் சில நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.