சென்னை:

மிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதி மன்றம் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு ஏற்கனவே நெடுவாசல் உள்பட பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள்  நடத்தி வரும் நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி, மீத்தேன் வாயு எடுத்தல் திட்டங்களுக்கு நாடு முழுவதும்  மேலும் 55 இடங்களில் மத்தியஅரசு அனுமதி வழங்கியது.

இந்த அனுமதிகளை  ஸ்டெர்லைட்  வேதாந்தா நிறுவனமும், ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி  நிறுவனமும் பெற்றுள்ளன.

மத்தியஅரசின் இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சிகள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த 16ந்தேதி (ஜனவரி 2020) ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி, அதுபோல, அந்த பகுதி மக்களின் அனுமதி  தேவை இல்லை என்று மத்திய அரசு விதிகளை திருத்தி புதிய அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டு உள்ளது.

இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதி மன்றம், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு கடந்த 16-ந்தேதி அரசிதழில் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் இதுபோன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு அடையும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவது மட்டுமின்றி விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் புராஜக்ட்

எனவே சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும், பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும், அரசியல் சட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் இந்த அறிவிப்பாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.