தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சிக்குத் தடை!: தமிழக அரசு உத்தரவு

தனியார் பள்ளிகளில், வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பயிற்சி நடத்தும் தனியார் நிறுவனங்கள்,  ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் பல தனியார் பள்ளிகளில் வெளியில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் மூலமாக மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த வருடம்  முதல் வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்துடன் நீட் சிறப்பு பயிற்சியும் இணைந்து மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிகள் வழங்கப்படும் என தனியார் பள்ளிகள் பல விளம்பரம் செய்யத் துவங்கின.  குறிப்பாக நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து  பதினொன்றாம் (பிளஸ் 1 ) வகுப்பு சேர்க்கையின்போது, பெற்றோர்களிடம் நீட் பயிற்சிக்காக என்று ஒன்று முதல் ஒன்றரை லட்ச ரூபாய்  வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கட்டணம் செலுத்த மறுக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு பள்ளியில் இடம் மறுக்கப்படுவதாகவும் பள்ளிக் கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

மேலும் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இது குறித்து ஆராய்ந்த பள்ளிக்கல்வித்துறை,  தனியார் பள்ளிகளில், வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் எஸ்.கண்ணப்பன், நேற்று (புதன்கிழமை) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பள்ளி நேரத்தில் வர்த்தக நோக்கத்துடன் செயல்படும் பயிற்சி மையங்களுடன் இணைந்து பள்ளி வளாகத்துக்குள் நீட், ஐஐடி, ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கக்கூடாது. எந்த ஒரு பயிற்சி வகுப்பிலும் சேருமாறு மாணவர்களை பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது.

பள்ளி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்திருப்பதை விட எந்த விதத்திலும் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தவிர வேறு எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட பிரிவு மற்றும் பாடத் திட்டங்களைத் தவிர வேறு எதனையும் கற்பிக்கக் கூடாது. விதிமுறைகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.