பூரண மதுவிலக்கு: அக்டோபர் 2ந்தேதி பாமக மவுன விரதம்!

 

சென்னை:

மிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக கட்சி சார்பில் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ந்தேதி மவுன விரதம் கடைபிடிக்கின்றனர்.

இதுகுறித்து பா பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

`தமிழகத்தில் மதுவால் ஏற்படும் தீமைகளையும், பாதிப்புகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அனைத்துக் குற்றச்சம்பவங்களுக்கும் மது தான் காரணமாக உள்ளது. ஆனால், மதுவை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்துள்ளன.

படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த அதிமுக, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதாகவும், மது விற்பனையை 2 மணி நேரம் குறைப்பதாகவும் அறிவித்தது. இதனால் ஒரு பயனும் ஏற்படவில்லை.

சட்டவிரோதமாக காலை 6 மணிக்கே மது விற்பனை நடக்கிறது.இந்தியாவிலேயே இளம் விதவைகளை அதிகம் கொண்ட மாநிலம் தமிழகம் என்ற நிலைக்கு மது தான் காரணம்.

மது குடிப்பதால் புற்று நோய், காசநோய், இதயநோய் என 200 வகையான நோய்கள் ஏற்படுவதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதால், உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, வாழ்நாள் முழுவதும் மது ஒழிப்புக்காக போராடிய மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று பூரண மதுவிலக்கினை வலியுறுத்தி, காந்தியின் போராட்ட வடிவமான மவுன விரதத்தை கடைபிடிக்க பாமக முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரை உட்புறச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே மவுன விரதம் கடைபிடிக்கப்படவுள்ளது. இதில், காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். மது ஒழிப்பு ஆர்வலர்களும் பங்கேற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு  ராமதாஸ் கூறியுள்ளார்.