மும்பை

வீடுகள் ஒதுக்கீடு செய்த நாளில் இருந்தே வீட்டு உரிமை தொடங்குகிறது என வருமானவரித்துறை தீர்பாயம் அறிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துவோர் தங்கள் நீண்ட கால சொத்துக்களை விற்று விட்டு புதிய சொத்துக்கள் வாங்கும் போது ஒரு சில சலுகைகள் அளிக்கப்படுகிறது. இந்த சொத்துக்களை விற்றதினால் வரும் வருமானத்தில் புதிய சொத்துக்கள் வாங்கினால் அந்த சொத்துக்களின் மதிப்பை கழித்து விட்டு மீதி உள்ள தொகைக்கு வரி செலுத்தினால் போதுமானது என்பது சலுகையில் ஒன்றாகும். இதற்கு அந்த சொத்துக்கள் உரிமை பெற்று 36 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும்.

மும்பையில் வசிக்கும் கெயூர் ஷா என்பவர் ஒரு இரு அடுக்கு குடியிருப்பை கடந்த 2012 ஆம் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி அன்று ரூ. 12 கோடிக்கு விற்பனை செய்தார். அவருக்கு அந்த சொத்தில் 50% உரிமை இருந்ததால்  இந்த முதலீட்டில் வருமானமாக ரூ.2.9 கோடி கிடைத்ததாக கூறப்பட்டது. அவர் தனது 2012-13 ஆம் ஆண்டு வருமான வரி கணக்கில் தாம் மற்றொரு புதிய வீடு ரூ.1.09 கோடிக்கு வாங்கியதால் மீதமுள்ள ரூ.1.8 கோடிக்கு வரி செலுத்தினார்.

ஆனால் இதற்கு வருமான வரி அலுவலர் மறுப்பு தெரிவித்தார். ”கெயூர் ஷா வால் விற்கப்பட்ட வீடு 2010 ஆம் வருடம் மார்ச் 25 அன்று விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த தேதியில் இருந்து கணக்கிடும் போது குறிப்பிட்ட சொத்து 36 மாதங்கள் முடியும் முன்பே விற்கப்பட்டுள்ளது. கெயூர் ஷா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் இருந்து கணக்கெடுத்தது செல்லாது.” எனக் கூறப்பட்டது.

இதை எதிர்த்து வருமான வரி தீர்ப்பாயத்தில் கெயூர்ஷா மேல் முறையீடு செய்தார்,

அதை விசாரித்த தீர்ப்பாயம், “இந்த வழக்கில் கெயூர் ஷாவுக்கு இந்த வீடு கடந்த 2008 அம் வருடம் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. எனவே அவர் அன்று முதல் அந்த இடத்துக்கு உரிமையாளர் ஆகி உள்ளார். அந்த கட்டிடம் கட்டப்படுவதற்கான தொகையை அவர் அன்று முதலே உரிமையாளர் என்னும் முறையில் செலுத்தி வருகிறார். எனவே ஒதுக்கீடு செய்யும் தினத்தில் இருந்தே சொத்துக்களுக்கு உரிமை உள்ளது” என தீர்ப்பளித்துள்ளது.