தமிழகத்தில் சொத்து வரி அதிரடியாக உயர்வு: அரசாணை வெளியீடு

--

சென்னை:

மிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட  உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில், தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, குறைந்தது 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை சொத்து வரி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு முதல் கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரி (Property Tax) உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்திற்கு வருவாய்பு இழப்பு  ஏற்படுவதாகவும், சொத்து வரியை உயர்த்த அனுமதி அளிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் கடந்த 17ந்தேதி விசாரணையின்போது, சொத்து வரியை உயர்த்தத் தமிழக அரசு 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது குறித்த அறிக்கையை இரண்டு வாரக் காலத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து,  நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு ஐம்பது விழுக்காட்டுக்கு மிகாமலும், வாடகைக் குடியிருப்புக் கட்டடங்களுக்கு நூறு விழுக்காட்டுக்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு நூறு விழுக்காட்டுக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி சொத்து வரி 50 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளது.