சொத்து வரி பிரச்சினைகள்: சென்னையில் 8ந்தேதி லோக் அதாலத்!

சென்னை:

சொத்து வரி சம்பந்தமான பிரச்சினைகளை தீர்வுக்கொண்டு வரும் வகையில் வரும் 8ந்தேதி (அடுத்த சனிக்கிழமை) லோக் அதாலத் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்குகளை விரைவாக முடிக்க உதவும் வகையில் அவ்வப்போது லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடைபெற்று வருகிறது. 2 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளில்  தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே, லோக் அதாலத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 8ந் தேதி (அடுத்த சனிக்கிழமை), லோக் அதாலத் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்ற கூட்டத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் பொதுமக்களின் சொத்து வரி தொடர்பான வழக்குகளுக்கு  தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சொத்து வரி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், பொது மக்கள் வருவாய் துறை அதிகாரியிடம் மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறி உள்ளார்.

சொத்து வரி தொடர்பான பிரச்சினைகள் இருப்போர், செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மனுக்கள் சமர்பிக்கலாம் என்றும்,  இந்த வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு, லோக் அதாலத்தின் கீழ் பட்டியலிடப்படும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.