சென்னை,
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தனர்.
அந்த மனுவில், ‘தங்களது கடைகளுக்கு 1996ம் ஆண்டு முதல் சொத்து வரி நிர்ணயம் செய்த சென்னை மாநக ராட்சியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  நீதிபதி கிருபாகரன்,  வழக்கு தொடர்ந்தவர்களுக்கு 1996ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சொத்து வரி செலுத்தாக  கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு உடனே ‘சீல்’ வைக்கவும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 1998-99ம் ஆண்டு சொத்து வரியை சென்னை மாநகராட்சி உயர்த்தியது.  அதன்பின்னர், ஏன் சொத்து வரியை உயர்த்தவில்லை என கேள்வி எழுப்பினார்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரியை உயர்த்த வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் வரியை உயர்த்த  ஏன் பரிந்துரை செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், கடந்த , 2002, 2006, 2010, 2014 மற்றும் 2016 வரை  5 முறை சொத்து வரி உயர்த்திருக்க வேண்டும். ஆனால், ஏன் வரியை உயர்த்தவில்லை என்றும் அதன் காரணமாக  சென்னை மாநகராட்சிக்கு ஏற்பட்ட இழப்பு  எவ்வளவு என்றும் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு  நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும்  நீதிபதி கிருபாகரன் முன்பு  விசாரணைக்கு வந்தது.
highcourt
அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி 1993-1994-ம் ஆண்டுக்கு பின்னர், 1998-1999-ம் ஆண்டு சொத்து வரியை உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் தமிழகம் முழுவது முள்ள உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை மாற்றியமைக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதி அரசாணை பிறப்பித்தார்.
இதன் பின்னர், வீடுகளுக்கு 25 சதவீதமும், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வணிக கட்டிடங்களுக்கு 150 சதவீதமும் சொத்து வரியை உயர்த்தவேண்டும் என்று 2008ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி மற்றொரு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையின் படி சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிலைக்குழுவுக்கு (வரி மற்றும் நிதி) பரிந்துரை செய்யப்பட்டன.
ஆனால், வீடுகளுக்கு 5 முதல் 10 சதவீத வரி உயர்த்தவேண்டும் என்று 2010ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால், வணிக கட்டிடம், தொழிற்சாலைகளுக்கு சொத்து வரியை உயர்த்த வில்லை.
இதன்பின்னர் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரியை உயர்த்த கோரி 2010ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி மீண்டும் நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், இந்த பரிந்துரையை உடனே ஏற்க முடியாது. சொத்து வரியை பின்னர் உயர்த்திக் கொள்ளலாம் என்று மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
அதனால் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட சொத்து வரியையே வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
property-tax
2002, 2006, 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் முறையாக சொத்து வரி உயர்த்தப்பட்டால், மாநகராட்சிக்கு எவ்வளவு இழப்பு என்று கணக்கிடப்பட்டது.
அதாவது, 1993-94 ஆண்டில் இருந்து 1998-99 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட வரியை கணக்கிட்டு, அதன்படி பார்த்தால், ரூ.1,841 கோடி வருவாய் சென்னை மாநகராட்சிக்கு கிடைத்திருக்கும்.
சொத்து வரியை மாற்ற்றியமைக்காததால் மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி கடும் அதிர்ச்சியடைந்தார்.
‘சொத்து வரியை உயர்த்தாததால், இவ்வளவு பெரிய தொகை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வருமானம் கிடைக்கவில்லை என்றால், எப்படி அடிப்படை வசதிகளை பொது மக்களுக்கு செய்து கொடுப்பீர்கள்?
மாநகராட்சி கல்யாண மண்டபத்துக்கு வாடகை உயர்த்தப்பட்டதா?
மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட், பொதுகழிப்பிடம் ஆகியவைக்கு வரி உயர்ந்தப்பட்டுள்ளதா?
இந்த கேள்விக்கு பிற்பகலில் மாநகராட்சி தரப்பில் பதிலளிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.