பூந்தமல்லியில் கருவேல மரங்கள் அகற்றம்! வைகோ மரம் வெட்டினார்

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் ஹோட்டல் ஹைவே அருகில் கருவேல மரங்களை அகற்றும் பணியில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ ஈடுபட்டார். அவருடன் கட்சியினர் பலர்  கலந்துகொண்டு கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று காலை 10.30 மணி அளவில் பூந்தமல்லி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஹோட்டல் ஹைவே அருகே உள்ள பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

மரம் அறுக்கும் இயந்திரத்தின் உதவியுடனும், அரிவாளால் வெட்டியும் மரங்களை  அகற்றினார்.

தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு சீமை கருவேல மரங்கள் வேலிக்காக விதைகள் கொண்டுவந்து நடப்பட்டது. அப்போது அதன் ஆபத்து யாருக்கும் தெரியவில்லை.

சீமை கருவேல மரங்கள் இருந்தால் மழை வராது. அதை அழித்தால் தான் மழை பெய்யும். பிராண வாயுவை உறிஞ்சி கரிமிலவாயுவை கருவேல மரங்கள் வெளியிடுகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து மதிமுக சார்பாக மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு, கோர்ட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை முதலில் அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வைகோவின் முயற்சிக்கு பாராட்டும் தெரிவித்தது.

இந்நிலையில், சீமை கருவேல மரங்கள் குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வைகோ. இன்று பூந்தமல்லி அருகே சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். அவருடன் மல்லை சத்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.