கொழும்பு:
இலங்கையில் ராணுவம் கையகப்படுத்திய பொதுமக்களின் நிலங்களை திருப்பி அளிக்கும்படி அந்நாட்டு அரசை ஐ.நா. செயலாளர் பான் கி மூன் வற்புறுத்தி உள்ளார்.
ஐ.நா. செயலாளர் பான் கி மூன், இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இன்று கொழும்பில் நடைபெற்ற, இலங்கையில் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கில்  கலந்துகொண்டார்.
a
அப்போது அவர் பேசியதாவது:
“இலங்கை ராணுவம் தமிழ் மக்களிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களை திருப்பியளிக்க வேண்டும். அதை விரைவாக செய்ய வேண்டும். அதன் மூலம், இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்படும்.  இலங்கை அதிபர் சிறிசேன இதுபற்றி என்னிடம் பேசும்போது, விரைவில் நிலங்களை திருப்பியளிக்கப்படும் என்று உறுதி கூறினார்.
வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இதன் மூலம், மக்கள் அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வளர்க்கவும், பதற்றத்தைக் குறைக்கவும் வழி  உண்டாகும்.
பழைய தவறுகளுக்குப் பரிகாரம் தேடுவதற்காக, இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, நீதித்துறை, பாதுகாப்புப் படையினரின் நம்பத்தன்மை மற்றும் பொறுப்புகளை மீட்டெடுக்க பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
அதே  நேரம், “மனித உரிமைகளைப் பாதுகாக்க  இலங்கை அரசு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்” என்று இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.