டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்று 38வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வரும்  4ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரமாக்கப்படும் என விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோடி தலைமையிலான மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும என வலியுறுத்தி வடமாநில விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   கடுமையான குளிரிலும் இரவு–பகலாக வெட்டவெளியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். டெல்லியின் சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் குடும்பங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் நேற்று 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த வெப்பநிலை ஆகும். இதனால் கடுமையான குளிர் வாட்டி வருகிறது.  இருந்தாலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.  விவசாயிகள் போராட்டம் காரணமாக, டெல்லியில் கடுமையான  போக்குவரத்து நெருக்கடியும் நிலவி வருகிறது.  போராட்டத்தையொட்டி டெல்லியின் எல்லைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் நூற்றுக்கணக்கான போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 6வவது கட்ட பேச்சுவார்த்தையின்போது, விவசாயிகளின் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. அதன்படி,  மின்சார கட்டணம்,  வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதம் போன்ற பிரச்சினைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

இருந்தாலும்,  3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் போன்ற கோரிக்கைகளை மத்தியஅரசு இதுவரை ஏற்கவில்லை.   இது தொடர்பாக வருகிற 4–ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அமைப்பு பிரதிநிதிகள் ,  வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாங்கள் எழுப்பிய பிரச்சினைகளில், மத்தியஅரசு கூறுவதுபோல 50சதவிகித பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவில்லை.  வெறும் 5 சதவீதம் அளவுக்கே விவாதிக்கப்பட்டு முடிவு எட்டப்பட் உள்ளது.

வருகிற 4–ந் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படடாவிட்டால்,   கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று எச்சரித்ததுடன்,

அரியானாவில் வணிக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்களை அடைப்பதற்கான தேதியை அறிவிப்போம்.

அரியானா–ராஜஸ்தான் மாநில எல்லையான ஷாஜகான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், டெல்லிக்கு வருவார்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்துவோம்.  என தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 4 ம் தேதி உழவர் சங்கங்களுடனான அடுத்த கூட்டத்தில் “சாதகமான முடிவு” கிடைக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என மத்திய  வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.