சென்னை விமான நிலையம் : உபேர், ஒலாவுக்கு எதிராக போராட்டம் !

சென்னை

சென்னை விமான நிலையத்தில் ஒலா மற்றும் உபேர் டாக்சி நிறுவனங்களுக்கு எதிராக மற்ற டாக்சி நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தை நம்பி பல பிரி பேய்ட் டாக்சிகளும், கால் டாக்சிகளும் உள்ளன.   பிரி பேய்ட் டாக்சிக்கு என ஒரு பூத் உள்ளது.  அதே போல பல கால் டாக்சிகளும் விமான நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வருவதையொட்டி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.   தற்போது விமான நிலைய அலுவலகத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி உபேர், ஓலா ஆகிய இரு டாக்சி நிறுவனங்களும்,  விமான நிலையத்தில் புக்கிங் மையம் அமைத்துள்ளது.

இதற்கு மற்ற டாக்சி நிறுவனம் மற்றும் ஓட்டுனர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  சென்னை விமான நிலைய டாக்சி உரிமையாளர்கள் சங்கம் விமான நிலையத்தின் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் போராட்டக் கூட்டம் நிகழ்த்தியது.  அதில் சுமார் 300 பேர் கலந்துக் கொண்டனர்.  அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

இது குறித்து சங்க செயலாளர் சுகுமார் இதனால் ஆயிரம் குடும்பங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கவலையுடன் தெரிவித்தார்.  ஃபாஸ்ட் டிராக் நிறுவன மார்கெட்டிங்க் மேனேஜர் மோகன்ராஜ், தாங்கள் மாதம் ரூ.45 லட்சம் கொடுத்து டெண்டர் எடுத்துள்ள நிலையில் ஒலா மற்றும் உபேர் நிறுவனங்கள் டெண்டர் இல்லாமல் ரூ. 15 லட்சத்துக்கு நேரடி ஒப்பந்தம் செய்துக் கொண்டது நியாயமற்ற செயல் என கூறி உள்ளார்.

ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் இந்த ஒப்பந்தம் வெறும் தற்காலிகமாக பரிசோதனை முறையில் செய்யப்பட்டதாகவும்,  இது மற்றவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல் இல்லை எனவும் தெரிவித்துள்ளன