மும்பை: ஆரே காடுகளை அழித்து மெட்ரோ பணிமனை கட்டும் அரசின் திட்டத்தை ஆதரித்து டிவீட் பதிந்த காரணத்திற்காக நடிகர் அமிதாப் பச்சனின் பங்களாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பசுமை ஆர்வலர்கள்.

மும்பை ஆரே காடுகளிலுள்ள 2700 மரங்களை அழித்து, அந்த இடத்தில் மெட்ரோ பணிமனை கட்டும் திட்டத்தில் உள்ளது அரசு. ஆனால், இதற்கு பசுமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், மெட்ரோ திட்டத்தை ஆதரித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டிவீட் பதிவிட்டிருந்தார். அதில், மெட்ரோ திட்டத்தினால் நகருக்கு விளையும் பயன் குறித்து குறிப்பிட்டிருந்த அவர், போகும் மரங்களுக்காக போராடாமல், அதிக மரங்களை நடுவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்தப் பதிவு கடும் எதிர்ப்புகளை கிளப்பியது. எனவே, அவரது இல்லத்தின் முன்பாக திரண்ட பசுமை ஆர்வலர்கள், ‘ஆரேவை பாதுகாப்போம்’ மற்றும் ‘தோட்டம் ஒரு காட்டை உருவாக்காது’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமைதி வழியில் போராடினர். இந்த அமைதிவழிப் போராட்டத்தை அங்கே குழுமியிருந்த காவல்துறையினர் தடுக்க முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.