காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத   மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதல் போராட்டம் இன்று தஞ்சையில் துவங்கியது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் விதித்த்து. ஆனால் இதற்காக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இன்றுடன் கெடு முடிவடைந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து  தஞ்சையில் விவசாயிகள் முதல் போராட்டத்தைத் துவங்கினர்.

காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று தஞ்சாவூரில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்தின் முடிவில் போராட்ட அறிவிப்புகள்தான் வெளியாகும் என்று  காவல்துறையினர் நினைத்தனர்.

ஆனால் அதற்கு மாறாக, திடீர் போராட்டத்தில் இறங்கிவிட்டனர் விவசாயிகள்.  தஞ்சையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த புது ஆற்றுச் சாலையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தீடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இரு புறமும் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  எதிர்பாராமல் நடந்துவிட்ட இந்தத் தீடீர் சாலை மறியலால் காவல்துறையினர் டென்சன் ஆகிவிட்டார்கள்.

பிறகு கூடுதல் காவலர்களைக் கொண்டு வந்து,  சாலைமறியலில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன் மற்றும் விவசாயிகள் உள்பட பலரையும் கைது செய்தனர்.

.செய்தியாளர்களிடம் பேசிய இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், `காவிரி பிரச்னையில் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கை எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இதை எதிர்த்து முதல் போராட்டத்தைத் தற்பொழுது தஞ்சாவூரில் ஆரம்பித்துள்லோம். தமிழ்நாடு முழுவதும் அடுத்தடுத்த போராட்டங்கள் நடத்தப்படும்” என்று கூறினார்.