சைதை பனகல் மாளிகை முன் சாலை மறியல்! எதிர்க்கட்சி தலைவர்கள் கைது

சென்னை:

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் தமிழக எதிர்க்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் நடைபெற்ற போராட்டத்தில் சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், விடுதலைசிறுத்தைக் கட்சி தலைவர் தொல்.திருமாவ ளவன், கம்யூனிஸ்டு தலைவர்கள் முத்தரசன், ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்பட ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சிகளின் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

பனகல் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள்  போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டவர்களை அழைத்து செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் போலீசார் திண்டாடினர்.