ரஜினிக்கு ஆதரவாக ஈழத்தில்  போராட்டம்: பின்னணியில் இலங்கை அரசு?

தமிழக அரசியல்வாதிகள் சிலரது எதிர்ப்பால் இலங்கை பயணத்தை ரத்து செய்த நடிகர் ரஜினிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ரஜினி நடித்துவரும் 2.0 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் அறக்கட்டளை, இலங்கையில் வீடிழந்த 150 தமிழர்களுக்கு வீடு கட்டித் தந்துள்ளது. இந்த வீட்டை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்க இருந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு வீடுகளை கையளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இலங்கை செல்வதை  தமிழக அரசியல் தலைவர்கள் சிலர்  எதிர்த்தனர்.  ரஜினியின் வருகைக்கு இலங்கையிலும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், “ஈழத்தமிழ் மக்களின்  பெரும்பாலான நிலங்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலையில் புதிய வீடுகள் கட்டித்தருவது என்பது நாடகமே. ஆகவே ரஜினி தனது வருகையை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ரஜினி தனது பயணத்தை ரத்து செய்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தின்  பயணத்தை எதிர்த்த அரசியல் தலைவர்களைக் கண்டித்து  இன்று மாலை இலங்கை யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதே நேரம், இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவர்கள், “தங்களது உரிமைக்காக சமீபத்தில் கூட பெரும் பேரணியை ஈழ மக்கள் யாழ்ப்பாணத்தில் நடத்தினர். அது போல இந்த விசயத்திலும் உணர்வு பூர்வமாக மக்கள் ஒன்றுபட்டிருந்தால் பெரும் மக்கள் திரண்டிருப்பார்கள். ஆனால் மிகச்சிலரே இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தவிர இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த “ஈழத்துக் கலைஞர்கள்” என்ற அமைப்பு நேற்று வரை இல்லை. ஆர்ப்பாட்டத்துக்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பாக இது தோன்றுகிறது.

தவிர ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பதாகையில் (பேனர்) தப்பும் தவறுமான தமிழில் எழுதப்பட்டுள்ளது.   “எமது மக்களுக்குக் கிடைக்கும் மனிதாபிமான உதவிகளுக்கு தடை விதிக்காதே” என்கிற வாசகத்துக்குப் பதிலாக “தடை நீக்காதே” என்று அதில் எழுதப்பட்டுள்ளது. இதில் இருந்து  தமிழ் சரியாகத் தெரியாத சிங்கள அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த பதாகை தயாரிக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஆகவே  இவர்கள் பின்னணியில் இலங்கை – சிங்கள அரசு இருப்பது உறுதியாகிறது” என்கிறார்கள்.

ரஜினியின் வருகையை இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் பஸில் ராஜபக்சே வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed