அமித்ஷாவின் வீடு நோக்கி சென்ற ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தம்!

டெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு நோக்கி பேரணியாக சென்ற ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டம் தொடரும் என தெரிவித்து உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 2 மாத காலமாக ஒரு தரப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த போராட்டக் காரர்கள் இன்று உள்துறை அமைச்சர்  அமித்ஷாவின் வீடு நோக்கி  பேரணியாக சென்றனர்.

ஆனால், காவல்துறையினர் அவரிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது சிலர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச வேண்டும் என்று வலியிறுத்தினார். ஆனால், இதற்கான முன் அனுமதி பெறப்படவில்லை என்று கூறிய காவல்துறையினர்  உரிய அனுமதியின்றி பேரணியாக வந்திருப்பதாக கூறி தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து உரிய அனுமதி கிடைக்கும் வரை ஷாகீன் பாக்கிலேயே போராட்டத்தை தொடருவது என முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்து உள்ளனர்.