டில்லி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராடி வரும் விவசாயிகள் தங்கள் செல்போன் டவர்களை அடித்து நொறுக்கி உள்ளதாக ஜியோ நிறுவனம் புகார் அளித்துள்ளது.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற முன் வரவில்லை.   இச்சட்டங்களால் அம்பானி, அதானி  போன்ற பெரும் முதலாளிகள் வேளாண் துறையைக் கைப்பற்றலாம் என்னும் அச்சம் விவசாயிகள் இடையே எழுந்துள்ளது.

எனவே இதே கோரிக்கைக்காகப் போராட்டம் நடத்தும் பஞ்சாப் மாநில விவசாயிகள் பெரும் நிறுவன சொத்துக்களைச் சேதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றன.  குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ செல்போன் டவர்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   பஞ்சாபில் இதுவரை சுமார் 1500க்கும் அதிகமான டவரக்ள் சேதம் அடைந்துள்ளன.

இத்தகைய தாக்குதல்களை நடத்தக்கூடாது எனப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்தும் தாக்குதல் குறையவில்லை என சொல்லப்ப்டுகிற்து.  ஜியோ நிறுவனம் பஞ்சாப் முதல்வரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளது.

இந்த புகாரில், ”எங்கள் ஜியோ நிறுவனத்திற்குச் சொந்தமான செல்போன் டவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நாசவேலை செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  இதில் அரசு துரிதமான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பல கோடி ரூபாய் நஷ்டத்தை தவிர்க்க முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.