பாலியல் வன்முறை – கொலையில் காவல்துறையினர் மெத்தனம்: தர்மபுரி காவல்ஆணையர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:

பாலியல் வன்முறை – பாலியல் கொலை தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் மெத்தனம் காட்டி வருவதாக தர்மபுரி காவல்ஆணையர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்கள் 2  பெண்கள், ஒரு சிறுமி உள்பட 3 பேர் பாலியல் தாக்குதல்களுக்கு  உள்ளான நிலையில், அதுகுறித்து காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, இன்று தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஊனமுற்றவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  போராட்டக்காரர்களுடன் கம்யூனிஸ்டு கட்சியினரும் கலந்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அதுதொடர்பாக காவல்துறையினர் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் 26வயது மாற்றுத்திறனாளி பெண், கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, பர்வதன்ஹள்ளி பகுதியில் உள்ள கிணற்றில் தூக்கி போட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பெண்ணாகரம் காவல்நிலையத்தில் புகார் பதியப்பட்டும் கடந்த 7 மாதங்களாக எந்தவித மேற்நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

அதுபோல  11வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 15 வயது சிறுவன் பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவன், பின்னர் பாலியல் வன்முறைக்கு ஆதாரம் இல்லை என்று கூறி காவல்துறையினரால் விடுதலை செய்யப்பட்டான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

அதுபோல 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவகாரத்திலும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று போராட்டம் நடைபெற்றது.

பொதுமக்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து, காவல்துறையினர் போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றினர்.

கார்ட்டூன் கேலரி