மகாராஷ்டிரா: மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் 3 பேர் தற்கொலை முயற்சி

மும்பை:

மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது உள்ளனர். இந்த போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தலைதூக்கியுள்ளது.

அவுரங்காபாத் கோதாவரி ஆற்றின் அருகே நேற்று ஜலசமாதி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் திடீரென ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இன்று அவுரங்காபாத்தில் நடந்த போராட்டத்தில் மேலும் 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 2 பேர் ஆற்றில் குதித்தனர். ஒருவர் விஷம் குடித்தார். மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அவுரங்காபாத்தின் கங்காபூரில் மராத்தா கிரந்தி மோர்ச்சா தொண்டர்கள் மொட்டையடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் போது ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நடந்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கங்காபூரில் லாரிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அவுரங்காபாத்தில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.