ஹாங்காங்: சீன அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து, சீன தன்னாட்சிப் பகுதியான ஹாங்காங்கில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.
இதனையடுத்து, போராட்டத்தைக் கலைக்க, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; மிளகுத் தூளை தூவினர்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், சீன அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து, கடந்தாண்டு மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. பல மாதங்களுக்கு போராட்டம் தொடர்ந்ததால், ஹாங்காங் ஸ்தம்பித்தது.
கொரோனா மற்றும் ஊரடங்கால், போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், ஹாங்காங்கில், மிகவும் கடுமையான, தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தப் போவதாக சீனா கூறியுள்ளது.
சீனாவுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபடுவோரை குறி வைத்து, இந்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிகிறது. இதற்கு, ஹாங்காங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஹாங்காங்கை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சீனாவின் முயற்சியை எதிர்த்து, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், போராட்டத்தைக் கலைக்க, ஹாங்காங் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் மிளகு தூளை தூவினர்.