ண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு.

அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்யை தேய்த்து புனித நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.

தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு, தீபாவளியை இப்படிக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுந்தது. உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார்.

முனிவரே, புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்; மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் வாசம் செய்கிறார். ஆகவே புனிதமான இந்நாளில் ஸ்நானம் செய்து இறைவனை வழி படுவது நன்மை பயக்கும்.

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின்வழியாகக் கூறுகின்றனர் .

இராமாயணத்தில், ராமர், ராவணனை அழித்து விட்டு, தனது  பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் லட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.

light1

புராணக் கதைகளின் படி நரகாசுரனை வதைத்த நாளே தீபாவளி என்று ஒருசாரார் கூறுகிறார்கள்.

நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன்.

நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

நமது முன்னோர்கள், நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்து, அவனது தாயான சத்திய பாமாவால் அவன் வதைக்கப்பட்டான்.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.

அதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

வால்மீகி ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஸ்கந்தபுராணத்தின் படி , சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து  21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார்.

இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார்.

இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.

1577- ல் இத்தினத்தில , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளியாக கொண்டாடுகிறார்கள் சமணர்கள்.

சகோதரிகளுக்கு பரிசு: 

வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான்.

தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது.

வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள்.

அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள்.

தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

கார்ட்டூன் கேலரி