நடிகர் என்பதைவிட மாணவர்கள் கல்விக்கு உதவுவதே பெருமை!:  சூர்யா

நடிகர் என்பதைவிட,  மாணவர்கள் கல்விக்கு உதவி செய்வதையே பெருமையாக நினைப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடிகர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையான ‘அகரம்’ சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும்  விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில் இறைவணக்கப் பாடலை, சிவகுமார் மகள் பிருந்தா பாடினார்.

தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து ஐந்தாயிரம் பரிசை சூர்யா அளித்தார். தாய்த் தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், வாழை இயக்கத்திற்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா அகரம் மூலம் உதவி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 2,500ஆக அதிகரித்துள்ளது. . விளையாட்டு, அறிவியல் பிரிவுகளில் வரும் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

நடிகன் என்பதை விட, அகரம் மூலம் மாணவர்கள் கல்விக்கு உதவுவதை உயர்வாக நினைக்கிறேன். வீட்டில் அப்பா, அம்மா, குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் செய்தாகிவிட்டது. இனிமேல் அனைத்தும் அகரம் அறக்கட்டளைக்காகத் தான்.

கிராமப்புற மாணவர்களுக்கு அதிக உதவி தேவைப்படுகிறது. இவர்களுக்கு நகர்ப்புறங்கள், வெளிநாடுகளில் இருப்போர் உதவி செய்தாலே போதும் என்று கூறினார். பின்னர் பேசிய நடிகர் சிவகுமார், கல்வி, ஒழுக்கம் நம்மை காப்பாற்றும். இதனை மாணவர்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.