நான் பெருமை அடைந்துள்ளேன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற நடராஜன் டிவீட்

சிட்னி

ந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றதால் தாம் பெருமை அடைந்துள்ளதாக தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது யார்க்கர் பந்து வீச்சால் உலக அளவில் புகழ் பெற்றவர் ஆவார்.  சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் வாழ்வில் மிகவும் அடிமட்ட நிலையில் இருந்து வந்தவர் ஆவார்.  இவர் ஐபிஎல் போட்டிகளில் இடம் பெற்று பலராலும் கவனிக்கப்பட்டார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நாள் போட்டிகளில் நடராஜன் சேர்க்கப்பட்டார்.  அவருக்குத் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் புகழாரம் சூட்டினர்.  தற்போது அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நடராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், “வெள்ளை சீருடையை அணிவது எனக்குப் பெருமைக்குரிய தருணமாக உள்ளது.  அடுத்து வரும் சவால்களுக்கு நான் தயாராக உள்ளேன்” எனப் பதிந்துள்ளார்.  அவருக்குப் பல ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  பத்திரிகை.காம் குடும்பம் நடராஜனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.