சென்னை:

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள், ரேசன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு வாழப்பாடி இராம சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள், ரேசன் அட்டைதாரர்களுக்கு, தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்று இந்திய தேசிய கிராம தொழிளர்கள் சம்மேளனம்  தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அனைத்துவிதமான போக்குவரத்தும் முடக்கப்பட்டு உள்ளது. தொழில்நிறுவனங் கள் உள்பட சாலையோர சிறுதொழில்களும், தொழிலாளர்களும், கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்திருக்கும் நிவாரணம், யானைப் பசிக்கு சோளப்பொறி போல உள்ளது.

இதுபோன்ற இக்கட்டான சூழலில், தமிழகஅரசு அறிவித்துள்ள ரூ.1000 மற்றும் நிவாரணப் பொருட்களை வாங்க, பொதுமக்களை ரேஷன் கடைகளுக்கு வரச்சொல்லி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அனைத்து ரேசன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.

முதலில் டோக்கன் வழங்கி, அதன்படி குறிப்பிட்ட நாளில் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்த அரசு, தற்போது, அதை நடைமுறைப்படுத்தாமல் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. இது கொரோனா தொற்று பரவலுக்கு வாய்ப்பாக அமையும்  சூழலை உருவாக்கி உள்ளது.

சமூக விலகளை கடைபிடிக்கச்சொல்லும் மாநில அரசு, இதை கருத்தில்கொண்டு  அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசு அறிவித்துள்ள உணவு பொருள் மற்றும் உதவி தொகை நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று  வினியோகம் செய்ய வேண்டும்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே 4 மாத ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது. அத்துடன் மேலும் 3 மாத ஓய்வூதியம் அட்வான்சாக  சேர்த்து வழங்கி அவர்களின் வாழ்வில் அரசு ஒளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.