டில்லி

குடியுரிமை சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர் கடந்த 1977 ஆம் ஆண்டில் இருந்து வழக்கறிஞராகப் பணி புரிந்து வந்தார். இவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாகவும்,  உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார்.  கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் 30 ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற லோகுர் தற்போது பிஜித்தீவு உச்சநீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

மதன் லோகுர் சமீபத்தில்அளித்த பேட்டியில், “குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாகி உள்ளது.   அரசியலமைப்பு விதிகளின்படி எந்த ஒரு சட்டத்திலும் நிபந்தனைகள் இருந்தால் அது குறித்த தெளிவான விளக்கம் இருக்க வேண்டும்.  அத்துடன் அந்த விளக்கம் அரசியலமைப்பின் அடிப்படையில் இருந்து மாறி இருக்கக் கூடாது.

ஒருவேளை இதில் மாற்றம் ஏதும் இருந்தால் அந்த மாற்றம் குறித்துச் சரியான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தும் அளவுக்கு அந்த விளக்கம் இருக்க வேண்டும்.   ஏற்கனவே மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிராக இந்த சட்டத் திருத்தம் அமைந்திருந்தால் அதற்கான காரணங்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும்படி அமைய வேண்டும்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தில் காணப்படும் நிபந்தனை இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அனைவரும் சமம் என்பதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது.   இதில் ஒரு சமுதாயம் மட்டும் சேர்க்கப்படவில்லை.   அதே வேளையில் குறிப்பாக மூன்று நாடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.  இது குறித்த விளக்கங்கள் சரியாக இல்லை.

அரசியலமைப்பு விதி எண் 14 இன் படி மக்களை, இனம், மதம், சாதி, மொழி என எவ்விதத்திலும் தனித்தன்மை படுத்துவது தவறாகும்.   எனவே இந்த விதிப்படி குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றே கூற வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.