டில்லி

பொதுத்துறை வங்கிகள் ரூ.516 கோடி அளவிலான வாராக்கடனை கடந்த அரை ஆண்டில் தள்ளுபடி செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கிகளில் வெகு நாட்களாக வசூலிக்கப்படாமல் உள்ள கடன் தொகைகளை வாராக்கடன் என அறிவிப்பது வழக்கம்.   அந்தக் கடன்கள் வங்கிகளின் கணக்கு வழக்கில் தென்படாத போதிலும் அதை வசூலிப்பதற்கான முயற்சிகள் தொடரும்.   தற்போதுள்ள நிலையில் பல பொதுதுறை வங்கிகளில் இந்த வாராக்கடன்கள் வசூல் செய்யப்படாமல் உள்ளன.

மொத்தமுள்ள வாராக்கடன்களில் சுமார் ரூ.25104 கோடி ஸ்டேட் வங்கியின் கணக்கில் உள்ளது.   மொத்தம் 1762 பேர் திருப்பித் தராமல் உள்ளனர்.   அடுத்த படியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1120 பேர் சுமார் ரூ.12278 கோடி தர வேண்டி உள்ளது.   மொத்தமுள்ள கடன் தொகையில் 40% ஆன ரூ. 37382 கோடி இந்த இரு வங்கிகளில் உள்ளது.

இந்நிலையில் 38 பேரின் வாராக்கடனை பொதுத்துறை வங்கிகள் கடந்த 2017 ஏப்ரல் முதல் 2017 செப்டம்பர் வரையிலான அரை ஆண்டில் தள்ளுபடி செய்துள்ளது.   இந்த தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ.516 கோடி ஆகும்.   இவ்வாறு தள்ளுபடி செய்தால் அந்த கடன் தொகையில் வர வேண்டிய முழுப் பணத்தையும் வங்கி வசூலித்து விட்டது என பொருளாகும்.

இந்த தகவலை மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.   பணத்தை திருப்பிப் பெற இயலாத நிலையில் மட்டுமே வாராக்கடன் என அறிவிக்க வேண்டும் என்பதும்  பணத்தை வசூலிக்க வங்கிகள் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது தெரிந்ததே.