ஸ்ரீஹரிகோட்டா: தகவல் தொடர்பு சேவைக்காக விண்வெளிக்கு இன்று மாலை அனுப்பப்பட உள்ள  பிஎஸ்எல்வி – சி 50 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து தகவல் தொடர்புக்கான சி.எம்.எஸ் – 01 செயற்கைகோளுடன்  பிஎஸ்எல்வி – சி 50 ரக ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 2.41க்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி ஸ்டேஜ் விகிதமாக நடைபெற்று வந்தது. இன்று காலை இறுதிக்கட்டமாக  எரிபொருள் நிரப்பும் பணி வெற்றிகரமாக முடிவடைந்து இருப்பதாக இஸ்ரோ  தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து,  இன்று மாலை 03.41 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில்  இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட உள்ள ‘சி.எம்.எஸ்-01’ செய்கைக்கோள், தகவல் தொடர்பு வசதிக்கான ‘சி பேண்ட்’ அலைக்கட்டை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் அலைவரிசை, இந்தியாவிலும், அந்தமான் – நிகோபர், லட்சத் தீவுகளில் பயன்படுத்த முடியும்.

இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரலையில் ராக்கெட் செலுத்தப்படுவதை காணலாம். நேரடியாக காண அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.