புதுடெல்லி:

கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகள், வழக்குகளை சந்திக்க சட்ட உதவியையோ, நிதியுதவியையோ  அரசு செய்யாது என மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக, தவறான முறையில் கடன் வழங்குவதும், சொத்து உத்தரவாதம் இன்றி கடன் கொடுப்பதும் அதிகரித்து வந்துள்ளது. இவ்வாறு கடன் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

அந்த வகையில், கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன் மற்றும் ஏர்செல்-மேக்ஸிஸ் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட ஐடிபிஐ வங்கியின் முன்னாள் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்நிலையில், அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

போதிய ஆவணங்கள் இன்றி கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீதான வழக்குகளுக்கு அரசு இனி உதவாது. ஏற்கெனவே, அவர்களுக்கு செலவிடப்பட்டிருந்தால், அந்த தொகை வசூலிக்கப்படும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற முறைகேட்டுக்கும் இது பொருந்தும்.
ஏர்செல்-மேக்ஸிஸ் போல் புலனாய்வு அமைப்புகள் பதிவு செய்த வழக்குகளில், இறுதி முடிவை சம்பந்தப்பட்ட வங்கிகளே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளுக்கு வங்கிகள் உதவ நினைத்தால், வங்கிகளின் வழக்கறிஞர்கள் குழு மூலமே செய்யவேண்டும்.

வழக்கறிஞர்களுக்கு ஆகும் செலவை, சம்பந்தப்பட்ட வங்கிகளே ஏற்கவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.