டில்லி:

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பவான் ஹான்ஸ், ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 300 ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்ட அகில இந்திய விமான போக்குவரத்த ஊழியர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் மத்திய அரசின் 51 சதவீத பங்குகளை வாங்க இந்த தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தை விற்பனை செய்யும் ஏலத்தில் கலந்துகொள்ள தொழிலாளர்களுக்கும் வழிவகை உள்ளது. இது நடந்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றமாக இது இருக்கும் என்ற கருத்து எழு ந்துள்ளது.

இந்த திட்டத்துக்கு துபாயை சேர்ந்த மார்டிங் கன்சல்டிங் நிறுவனத்தை ஆலோசகராக தொழிற்சங்கம் நியமனம் செய்துள்ளது. அரசின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை மேற்கொண்டு வருகிறது. அரசின் பங்கு மதிப்பு ரூ. 500 கோடியாகும். தனியார் பங்களிப்பு, மூலதன நிதி மூலம் நிதி திரட்ட தொழிற்சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய நிதி நிறுவனங்களுடன் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பவான் ஹான்ஸ் நிறுவனத்தின் மீதமுள்ள 49 சதவீத பங்குகளை அரசின் எண்ணைய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் வைத்துள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள வரும் 15ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊழியர்கள் மேலும் கால அவகாசம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து ஏழு நாட்கள் நீட்டிப்பு வழங்கப்பட் டுள்ளது. இந்த பரிமாற்றத்துக்கு எஸ்பிஐ கேபிட்டல் மார்கெட்ஸ் நிறுவனத்தை ஆலோசகராக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

முன்னதாக இந்நிறுவனத்தை விற்பனை செய்யும் மத்திய அரசின் முயற்சிக்கு தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இது நியாயமற்ற செயல் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியது. இதைத் தொடர்ந்து தான் அரசு பங்குகளை வாங்கும் வலுவான முடிவை தொழிற்சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது. ஏர் இந்தியாவின் நிதி நிலைமையை விட பவான் ஹான்ஸ் நிதி ஆதாரம் நல்ல நிலையில் இரு க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.