ராஞ்சி: ஒரு கிரிக்கெட் அணியில் மனநலப் பயிற்சியாளர் என்பவர் எப்போதுமே இருக்க வேண்டியவர் என்றும், அவர் 15 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடியவர் இல்லை என்றும் பேசியுள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி.
அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவில் மனரீதியான விஷயங்களில், வெளிப்படையாக உண்மையைப் பேசுவதில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. இதனை மனநோய் என்கிறோம்.
ஒரு பேட்ஸ்மேன் என்ற முறையில், எனக்கு முதல் 5 – 10 பந்துகளை எதிர்கொள்வதில் ஒரு பதற்றம் உண்டு. அப்போது எனது இதயத்துடிப்பு அதிகரிக்கும். இந்தப் பிரச்சினை கிட்டத்தட்ட அனைவருக்குமே உண்டு.
இதுவொரு சிறியப் பிரச்சினைதான் என்றாலும், இதனை பயிற்சியாளரிடம் சொல்வதில் நிறைய தயக்கம் உள்ளது. எனவே, விளையாட்டில், பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையிலான தொடர்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
எனவே, மனநலப் பயிற்சியாளர் என்பவர் 15 நாட்களுக்கு ஒருமுறை வருபவராக இருத்தல்கூடாது. அப்படி வரும்போது அவர் வீரர்களின் அனுபவத்தை மட்டுமே கேட்பவராக இருக்கிறார். ஆனால், எப்போதும் உடனிருந்தால்தான் வீரர்களின் மன பலவீனங்களை அறிந்துகொண்டு, அதற்கேற்ப உதவ முடியும்” என்றுள்ளார் தோனி.