திருவனந்தபுரம்

பாட்மிண்டன் உலகச் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற பி வி சிந்துவைப் பற்றி பல வருடம் முன்பு ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற பி டி உஷா நினைவு கூர்ந்துள்ளார்.

உலக அளவிலான பாட்மிண்டன் போட்டிகளில் தற்போது தொடர்ந்து  தங்கப் பதக்கங்களை வென்று வருகிறார் பி வி சிந்து. தற்போது உலகச் சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளார். அவரை இந்தியர்கள் தங்க மங்கை என புகழ்கின்றனர். பல வருடம் முன்பு ஓட்டப்பந்தயத்தில் பல தங்கப்பதக்கங்களை வென்று ஒலிம்பிக்கில் பல சாதனைகளைப் புரிந்த பி டி உஷா தங்க மங்கை என புகழப்பட்டவர் ஆவார். விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற உஷா ரெயில்வேத் துராஇயில் பணி புரிந்து வருகிறார்.

சிந்துவின் வெற்றிக்குப் பிறகு உஷா தனது டிவிட்டரில் சிந்துவின் சிறு வயதில் தாம் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். அத்துடன் அவர்,  “விளையாட்டின் மீதுள்ள ஆர்வமும் அர்ப்பணிப்பும் கடின உழைப்புடன் இணையும் போது அது பரிசுகளைத் தேடித் தரும். பிவி சிந்துவின் வெற்றி பல தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிக்கும். உலக சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டார்.

உஷா தாம் வெளியிட்ட புகைப்படம் குறித்து, ”கடந்த 2001 ஆம் வருடம் ஐதராபாத் நகரில் ரெயில்வே விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அந்தப்  போட்டியில் ரெயில்வேத் துறையில் பணி புரிந்த வாலிபால் விளையாட்டு வீரரும் சிந்துவின் தந்தையுமான ரமணா கலந்துக் கொண்டார். நான் அந்த விழாவுக்குச் சென்ற போது எனது வழக்கத்துக்கு மாறாக சிந்துவின் குடும்பத்தினருடன் தங்கினேன். பொதுவாக நான் தனியாகத் தங்குவது வழக்கம் எனினும் அந்த குடும்பம் எனக்குப் பழக்கம் என்பதால் அவர்களுடன் 3-4 தினங்கள் தங்கினேன்.

அப்போது சிறு குழந்தையாக இருந்த சிந்து எனது மடியில் உட்கார்ந்து விளையாடுவார். எங்கள் இருவரையும் அவர் குடும்பத்தினர் பல புகைப்படங்கள் எடுத்தனர். கடந்த 2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு சிந்துவின் தந்தை இந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பி இது யார் எனத் தெரிகிறதா எனக் கேட்டார். நான் எப்படி அந்த அழகான துருதுருப்பான குழந்தையை மறக்கமுடியும்? நான் அவருடைய  அனைத்து புகைப்படங்களையும் என்னிடம் வைத்துள்ளேன். சிந்துவின் புகழை மட்டும் அல்ல அவருடைய தவறுகளையும் நான் உரிமையுடன் சுட்டிக்காட்டுவேன்” என தெரிவித்துள்ளார்.