அகமதாபாத்: திருமணமாகி 1 வயது குழந்தையுள்ள 19 வயது அகமதாபாத் பெண் ஒருவர், தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார்.

இது ஏதோ குடும்ப சித்ரவதை அல்லது வரதட்சிணை கொடுமை என நினைத்துவிடாதீர்கள். அதே குஜராத்தில் முன்பு தடைசெய்யப்பட்ட பியுபிஜி விளையாட்டுதான் இந்த முடிவுக்கு காரணம்.

வீட்டு வேலைகளையும், குழந்தையையும் சரியாக கவனிக்காமல், எந்நேரமும் அந்த வீடியோ கேமை விளையாட அந்தப் பெண் விரும்பிய நிலையில்தான் குடும்பத்தில் பிரச்சினை வெடித்துள்ளது.

தனக்கு விவாகரத்துப் பெற உதவிடக்கோரி, அபயம் மகளிர் உதவி தளத்தை அப்பெண் தொடர்புகொண்ட போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அவர், தன்னிடமிருந்து மொபைல் ஃபோனை பிடுங்கி விடுவதால், தன் பெற்றோர் வீட்டிற்கும் செல்ல விரும்பாமல், அபயம் இல்லத்திலேயே தங்கியிருக்க விரும்பியுள்ளார். அதன்மூலமே, தனக்கு அதிக நேரம் கிடைக்கும் என நினைத்துள்ளார்.

ஆனால், விரிவான விசாரணைகளுக்குப் பின்னர்தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனைத்தும் தெரியவர, அப்பெண்ணிற்கு முறையான கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்பெண்ணின் பெற்றோரிடம், தேவையான மனநல உதவி வழங்கப்படுவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.