ஓ.பி.எஸ். தோட்டத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! வாய் திறப்பாரா ஓ.பி.எஸ்.!

--

தேனி:

பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான தோட்டத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வருகிறார்கள். நிலையை சமாளிக்க அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நூறு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது.

இங்குல் 200 அடி ஆழம் கொண்ட 4 பெரும் கிணறுகளை ஓ.பி.எஸ். வெட்டியுள்ளார். ஐந்தாவதாக ஒரு கிணறும் வெட்டப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் முழுதும் இந்த கிணறுகள் மூலம் எடுக்கப்பட்டு விடுகிறது. ஆகவே லெட்சுமிபுரத்திலும் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் நிலத்தடி நீர் வற்றிவிட்டது.

இதையடுத்து அப்பகுதியில் கடுமையா குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து கிணறு தோண்டும் பணியை நிறுத்திய அதிகாரிகள் கிணறுகளை ஆய்வு செய்தனர்.

கிணறு வெட்டும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஓ.பி.எஸ். தோட்டத்தில் மீண்டும் கிணறுவெட்டும் பணி நடப்பதாக மக்களிடையே தகவல் பரவியது. மீண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஓ.பி.எஸின் தோட்டத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டுள்ளனர். நிலையை சமாளிக்க அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது..

ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறுகளால்தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மக்கள், அக்கிணறுகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அவர்கள், “ஓ.பி.எஸ். முன்னாள் முதல்வராக இருந்தவர். பெரும் பணக்காரர். அவர் நினைத்தால் அந்த கிணறுகளை மூடிவிட முடியும்.

இதனால் அவருக்கு இழப்பு ஏதும் இல்லை. அதே நேரம் இந்த பகுதி மக்கள் உயிர்வாழ வாய்ப்பாக அமையும்” என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இதுவரை இப்பிரச்சினை குறித்து ஓ.பி.எஸ். ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.