டில்லி,
நேற்று விடுமுறைக்கு பிறகு 11வது நாளாக இன்றும் வங்கிகள் முன் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
டில்லியில் ராகுல்காந்தி திடீரென வங்கி வாசலில் காத்திருக்கும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
கடந்த 8ந்தேதி பணம் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து கடந்த 10ந்தேதி முதல் வங்கிகளில் பணம் மாற்றவும், 11ந்தேதி முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்கவும் வசதி செய்யப்பட்டது. ஆனால் போதுமான பணம் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
rahul
கடந்த 10 நாட்களாக பொதுமக்கள்  பணம் மாற்றவும், சில்லரைகள் பெறவும் கடும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு இன்று வங்கிகள் திறக்கப்படுவதால் அதிகாலை முதலே பொதுமக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களின் வாசலில் நிற்கத் தொடங்கியுள்ளனர்.
நாட்டின் தலைநகரான டில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே பொதுமக்கள் வங்கிகள் வாசலில் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, இன்று அதிகாலையில் திடீரென டில்லியில் உள்ள பல்வேறு ஏடிஎம் மையங்களை பார்வையிட்டு அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
2 நாட்களாக வங்கிகள் சென்று பணம் எடுக்க முடியவில்லை என்பதால் உணவுக்கும், மருத்துவ செலவுக்கும் பணமின்றி தவிப்பதாக மக்கள் அவரிடம் குறை கூறினர்.
ஏடிஎம்களில் பணம் நிரப்பப்பட்ட சில நிமிடங்களிலேயே பணம் தீர்ந்துவிடுவதாக கூறும் பொதுமக்கள், அதிலும் ரூ.2000 நோட்டுகளாக அதனை மாற்ற முடியவில்லை என கூறினர்.