சென்னையின் 15 இடங்களில் நாளை குறை தீர்க்கும் கூட்டம்! குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை:

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டம் சென்னையில் 15 இடங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், திறந்தவெளிக் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான திறந்த வெளிக் கூட்டம் சனிக்கிழமை 10.8.2019 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.

இந்த திறந்த வெளிக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

‘எனவே இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

கடந்த மாதம் ஜூலை 2019ல் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தமாக 42 மனுக்கள் பெறப்பட்டதில் 36 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.