தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு!

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் பதவிக்காலம் முடிவடையாத நிலையில், தேர்தல் அறிவித்துள்ளது சட்ட விரோதம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை  தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்து,  தேர்தலை நடத்து வதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகளும்,  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை களமிறக்கி வருவதுடன், பிரசாரங்களையும் முன்னெடுதது உள்ளன.

இந்த நிலையில்,  தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 5 மாநில  தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என  வழக்கறிஞர் எம்.எல். சர்மா  உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு  தாக்கல் செய்துள்ளார்.  அதில், 5 மாநிலங்களில்   சட்டப்பேரவை பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே தேர்தல் நடைபெற உள்ளது. பேரவை பதவிக்காலம் முடிந்த பிறகுதான்  தேர்தல் நடத்த வேண்டும்  என்றும், பிரதமர் பொதுவானவர் என்பதால்,  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வில் மார்ச் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.