திருச்சியில் திமுக.வின் நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்துக்கு தடை

திருச்சி:

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானாத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான திமுக.வினர் மேற்கொண்டு வந்தனர்.

இதில் ஸ்டாலின் உள்பட பல கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது.

இதையடுத்து திருச்சியில் திமுக கூட்டிய கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கான தடை உத்தரவு நகலை திருச்சி சங்கம் ஹோட்டலில் உள்ள கே.என்.நேருவிடம் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண் நேரில் ஒப்படைத்தார்.

தடையை மீறி கூட்டம் நடைபெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.