மக்களின் மனநிலை மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

சென்னை:
க்களின் மனநிலை மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்த் தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆகியவற்றை துவக்கிவைக்கும் விழா நேற்று மாலை நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் கொரோனா கால செயல்பாட்டை பாராட்டிய அமித் ஷா, கொரோனா காலத்தில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் கவனிப்பு தமிழ்நாட்டை போல வேறு எந்த மாநிலத்திலும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை ஆகிய குறியீடுகளில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது என்றார் அமித் ஷா.

மாநிலங்களுக்கு இடையான போட்டியில் தமிழகம் முன்னிலை வகிப்பதை போல, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில், வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன என்றும் அவர் பேசினார்.

முன்னதாக பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபைத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என உறுதிப்படத் தெரிவித்தார். மேலும் அதிக இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசு மற்றும் மத்திய பாஜக அரசு இனைந்து செயல்படுவதால் வளர்ச்சிகள் சாத்தியமானது என்று குறிப்பிட்டார். அதேநேரத்தில், 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தனியார் தொலைக்காட்சி ஒன்று அளித்த பேட்டியில், தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஹிந்தி திணிப்பு, காவிரி, முல்லைப் பெரியார் மற்றும் ஜிஎஸ்டி போன்றவைகளால் மக்களின் மனநிலை மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் போது, இந்த கூட்டணி தோல்வியை சந்தித்து குறித்து கட்சி ஆய்வு செய்து வருகிறது என்றும், அந்த நேரத்தில் செய்த தவறுகளை சரி செய்தால் மட்டுமே பாஜக தமிழகத்தில் செல்வாக்கை பெற முடியும் என்றும் தெரிவித்தார்.