டெல்லி: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் வகையில், பொது இடங்களை ஆக்கிரமித்து போராட்டங்கள் நடத்துவது சட்டவிரோதம் என தீர்ப்பளித் துள்ள உச்ச நீதிமன்றம், சட்டத்தை மீறுவோரை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும், இதற்கு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்க்கக்கூடாது என்றும் அதிரடியாக தெரிவித்து உள்ளது.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியக் குடியுரிமை பெற மதத்தை ஒரு காரணியாக்கிய குடியுரிமை திருத்த சட்டம் டிசம்பர் 10, 2019 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. குடியுரிமை திருத்த சட்டத்தின் சரத்துகள் ஜனவரி 10, 2020 இந்தச் சட்டம் அமலுக்கு வரும் நாளாக மத்திய அரசு  அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இனி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும், அதேவேளையில், அந்நாடுகளில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள் இந்தியாவில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.

மேலும்,   அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின்போது சட்டவிரோத குடியேறிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களில் இஸ்லாமிய ர்கள் அல்லாதவர்களும் ரத்து செய்யப்பட்ட இந்தியக் குடியுரிமையை மீண்டும் பெறலாம்.
இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டங்களில் மைய களமாக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் விளங்கியது.  இங்கு நடைபெற்ற போராட்டத்தில், ஷிப்டு முறையில், இஸ்லாமிய பெண்களையும், குழந்தைகளையும் போராட்டக்காரர்கள் களமிறக்கினர். இதனால், போராட்டத்தை கலைப்பதில் சிக்கல் எழுந்தது. சுமார் 3 மாதம் காலமாக நடைபெற்ற இந்த போராட்டம் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக போராட்டம் பிசுபிசுத்து, கலைந்தது.
இதற்கிடையில்,  போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி  உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமித் சாஹ்னி என்பவர்  உள்பட பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுவில், “மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில், பொது இடங்களில் இப்படி நீண்ட நாள்களுக்கு போராட்டம் நடத்தலாமா? இது குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த  நிலையில்,  உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

“ஷாஹீன் பாக்கோ அல்லது வேறு இடமாக இருந்தாலும் சரி, பொது இடங்களை நீண்ட நாள்களுக்கு ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. இதனை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இம்மாதிரியான போராட்டங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரியான பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வதை அரசு தடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அரசு காத்திருக்க வேண்டாம்.

“போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சாலை மறியல் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில், நாடாளுமன்றத்திலும் சாலையிலும் போராட்டம் நடைபெறலாம். சாலையில் நடைபெறும் போராட்டம் அமைதியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரே மாதிரியான தீர்வினை வழங்க முடியாது” என அமர்வு கருத்து தெரிவித்தது.

“ஜனநாயகத்தில் எதிர் கருத்துக்களை தெரிவிக்கலாம். இருப்பினும் இதுபோன்ற போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது” 
ஷாஹீன் பாக் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்‍கும் வகையில் பொது இடங்களை நீண்ட நாட்களுக்கு ஆக்கிரமித்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் 
தனிநபரோ அல்லது ஒரு போராட்டக்‍ குழுவோ இது போன்ற பொது இடங்களில் போராட்டம் நடத்த அதிகாரம் கிடையாது.
பொது இடங்கள் மற்றும் சாலைகளை நீண்ட காலத்திற்கு ஆக்கிரமித்து போராட்டங்கள் நடத்தக்‍கூடாது.
சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்கள் இதுபோன்ற பொது இடங்களை போராட்டக்காரர்கள் ஆக்கிரமிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு பொது இடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துவதற்கு, நீதிமன்ற உத்தரவுகளை எதிர்பார்த்து நிர்வாகங்கள் காத்திருக்கக்‍ கூடாது .
போராட்டம் நடத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.