அதிரடிக் கண்காணிப்பில் ஊரடங்கு – பெருநகரங்களுக்கு வழிகாட்டும் தமிழக ஊராட்சி…

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள புதுவாயல் ஒன்றியத்தில் ஊரடங்கின் போது  யாரும் வெளியேறவோ உள்ளே வரவோ கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்  நடைமுறையில் உள்ளது. ஆனால் பலவிடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து  வருகிறது.  இந்நிலையில் புதுவாயல் ஊராட்சியில் ஊரடங்குச் சட்டம் மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது. தெருக்களுக்கு இடையில் தடுப்புகள் அமைத்து யாரும் ஊர்ப் பகுதிக்குள்  நுழையவோ,  வெளியேறவோ தடை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

ஒரு தெருவில் இருப்பவர் அடுத்த தெருவிற்கு நுழையவும் அனுமதி இல்லை. அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் ஊராட்சியில் அனுமதி பெற்றே செல்லும் நிலை உள்ளது.

புதுவாயல் ஊராட்சியின் தலைவர் அற்புதராணி மற்றும் சமூக ஆர்வலர் பிரபாகரன் உள்ளிட்டோர் இதனை மிகக் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “கொரோனா பரவுவதைத் தடுக்கும் நோக்குடன் ஊரடங்கு உத்தரவை முழுமையாக செயல்படுத்த எண்ணினோம். எனவே தெருக்கள் அனைத்தின் தொடக்கத்திலும் தடுப்புகளையும், எச்சரிக்கைப் பலகைகளையும் வைத்திருந்தோம். கட்டுப்பாடுகளை மீறி, காரணமின்றி வெளியே சுற்றுவோர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் படுவர் எனவும் அறிவித்திருக்கிறோம். மக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

கடுமையான கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் இருந்தும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் பொதுவெளியில்  வருவதை தடுப்பது சிரமமாகவே உள்ளது. இச்சூழலில் தமிழக ஊராட்சி ஒன்றின் நிருவாகமும், மக்களும் பொறுப்புடன் செயல்பட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கார்ட்டூன் கேலரி