புதுச்சேரி சட்டமன்றம்: இன்று முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடக்கம்

புதுச்சேரி:

சில மாத இழுபறிக்கு பின்னர் கடந்த வாரம் புதுச்சேரி மாநில பட்ஜெட் முதல்வர் நாராயணசாமியால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றுமுதல்  புதுவை சட்டப்பேரவையில்  மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் 2-ஆம் தேதி தொடங்கியது.  ரூ.7,530 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் வே.நாராயணசாமி தாக்கல் செய்தார்.  அதைத் தொடர்ந்து   ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும்  நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதமும் பேரவையில்  நடைபெற்றது. அத்துடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றம் இன்று மீண்டும் கூடியது. இன்று முதல் (9, 10,11 தேதிகள்)  புதன்கிழமை வரை பொதுப்பணித் துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்கள நடைபெற்ற உள்ளன.

அதைத்தொடர்ந்து  12, 13 ஆகிய தேதிகளில் சுகாதாரத் துறை அமைச்சரின் மருத்துவம், மீன்வளம் ஆகியவற்றின் மீதான மானியக் கோரிக்கைகளும்,

16,17,18 ஆகிய நாள்களில் சமூகநல அமைச்சரின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு, சமூக நலம், கூட்டுறவு, துறைமுகம் மற்றும் கப்பல் வழிகாட்டல் துறைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது.

ஜூலை 19, 20 ஆகிய இருநாள்கள் வருவாய்த்துறை அமைச்சரின் வருவாய் மற்றும் உணவு, போக்குவரத்து, தொழில்கள் மீதான மானியக் கோரிக்கையும்,

23, 24 ஆகிய தேதிகளில் வேளாண் அமைச்சரின் கல்வி, வேளாண்மை, சமுதாய வளர்ச்சி, மின்விசை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும்.

25, 26 ஆகிய நாள்களில் முதல்வரின் சட்டப்பேரவை, ஆட்சியாளர், அமைச்சரவை, நீதி நிர்வாகம், தேர்தல்கள், விற்பனை வரி, அரசுச் செயலகம், கருவூலம் மற்றும் கணக்குகள் நிர்வாகம், காவல், சிறைச்சாலைகள், ஓய்வு அனுகூலங்கள், செய்தி மற்றும் விளம்பரம், அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் ஆகியவை மீதான விவாதமும் நடைபெறுகிறது.

27-ஆம் தேதி தனிநபர் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதுகுறித்து விவாதம் நடைபெறும்.

இவ்வாறு சட்டமன்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.